Published Date: March 20, 2023
CATEGORY: CONSTITUENCY
தமிழ்நாடு அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் 2023-24 நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் 1000 வழங்குவது, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹ 100 மானியம், மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியம் ₹1500, கல்வித்துறை மீண்டும் மாநிலபட்டியலுக்கு கொண்டு வருதல் ஆகியவை குறித்தும், முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றுவார். அதன் பின்னர் சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகள் முடிவடையும். இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூடம் நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. இன்றைய பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும் நாளை 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் பேரவை கூட்டம் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் தமிழக ஆளுநர் 4 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 8ம் தேதி திருப்பி அனுப்பினார்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 2வது முறையாக சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பும்போது அவரால் நிராகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
Media: Dinakaran